பொதுவாக விடுமுறை நாட்கள் என்றாலே இந்தியர்களுக்குக் காலையில் தாமதமாக எழுவது, ருசியான உணவுகளை உண்பது மற்றும் ஓய்வெடுப்பது போன்ற பழக்கங்களே நினைவுக்கு வரும். ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறாக அமெரிக்கர்களின் ஆரோக்கியமான விடுமுறை கலாச்சாரத்தைப் பாராட்டி, இந்தியர்கள் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய உள்ளடக்க உருவாக்குநரான  பாலக் வாஹி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நியூயார்க்கில் உள்ள லேக் ப்ளாசிட்என்ற சிறிய நகரத்திற்குச் சுற்றுலா சென்றிருந்த பாலக், அங்குள்ள மக்கள் விடுமுறை நாட்களைச் சோம்பேறித்தனமாகக் கழிக்காமல், அதிகாலையிலேயே ஓடுதல், நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் மலையேற்றம் போன்ற உடல் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுவதைக் கண்டு வியந்துள்ளார். உடற்பயிற்சி என்பதை ஏதோ ஒரு கடமையாகச் செய்யாமல், பற்களைத் துலக்குவது மற்றும் குளிப்பது போல தங்களின் தினசரி வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக அவர்கள் மாற்றி வைத்துள்ளனர் என்று அவர் பாராட்டியுள்ளார்.

விடுமுறை நாட்களில் உடலை வருத்திக்கொள்ளாமல் வெறும் 20 நிமிடங்களாவது நடைப்பயிற்சி அல்லது எளிய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பாலக் வாஹி தனது பதிவில் அறிவுறுத்தியுள்ளார். இந்த வீடியோவிற்கு இணையவாசிகள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலர் இந்த கருத்தை ஏற்றுக்கொண்ட போதிலும், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமான நடைமுறைச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக, இந்தியாவின் அதீத வெப்பமான தட்பவெப்ப நிலை உடற்பயிற்சிக்குக் சவாலாக இருப்பதாகச் சிலரும், மும்பை போன்ற பெருநகரங்களில் ஓடுவதற்கு அல்லது நடைப்பயிற்சி செய்வதற்குப் போதிய பூங்காக்கள் மற்றும் பொது இடங்கள்  இல்லை எனச் சிலரும் தங்களின் ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளனர். மேலும், அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள லிட்டில் ராக் நகரம் 40 சதவீதத்திற்கும் அதிகமான உடல் பருமன் விகிதத்தைக் கொண்டு உலகின் மிகக் குண்டான நகரமாகத் திகழும் போது, ஒட்டுமொத்த அமெரிக்காவையும் இதற்குக் உதாரணமாகக் கூற முடியாது என்றும் நெட்டிசன்கள் சிலர் வாதாடி வருகின்றனர்.