திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரத்தில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும். அந்த வகையில் நேற்று பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்ற போது மேலப்பாளையத்தை சேர்ந்த ஷபா ஹாதீயா என்ற மூன்று வயது பெண் குழந்தை கையில் மனுவுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்திருந்தது பலரது மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியது.

அதாவது மேலப்பாளையத்தில் அந்த குழந்தை படிக்கும் அங்கன்வாடி மையத்தில் கழிப்பறை வசதி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாததால் தன்னுடைய தந்தையுடன் குழந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்துள்ளது.

தன்னுடைய மழலை மொழியில் பேசி கலெக்டரிடம் குழந்தை மனு கொடுத்தது பலரது மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியதோடு குழந்தைக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. மேலும் அங்கன்வாடி மையத்தில் கழிப்பறை வசதி இல்லாததால் நீண்ட தூரம் நடந்து தொடக்கப் பள்ளிக்கு தான் கழிப்பறைக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என குழந்தையின் தந்தை செய்தியாளர்களிடம் கூறினார்.