கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்து…. ரூ.3 லட்சம் மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கே.புதுப்பாளையம் பகுதியில் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி பண்ணை வைத்துள்ளார். இவர் தனியார் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்தும், கடன் கிடைக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கதிரேசனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் தான் சேலம் 5 ரோட்டில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஒரு நிதி நிறுவனத்திடம் இருந்து 50 லட்ச ரூபாய் கடன் வாங்கி தருவதாக அந்த நபர் கூறினார்.

மேலும் அந்த கடனுக்கு ரூபாய் 3 லட்சத்திற்கு பத்திர ஆவணங்கள் வாங்க வேண்டும். மேலும் அதற்கான பணத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் கருவூலத்தில் செலுத்த வேண்டும் என அவர் கூறினார். இதனை நம்பி கதிரேசன் பணத்துடன் நேற்று முன்தினம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் செல்போனில் பேசிய நபர் கதிரேசனிடம் இருந்து பணத்தை வாங்கியுள்ளார்.

இதனையடுத்து அந்த நபர் பணத்தை வாங்கிக் கொண்டு கருவூலத்திற்கு சென்று வருவதாக கூறினார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த நபர் திரும்பி வரவில்லை. இதனால் தான் மாற்றப்பட்டதை அறிந்த கதிரேசன் சேலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.