குஜராத் மாநிலம் பனஸ்காந்தா மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான பெண் ஒருவரைக் கட்டாயப்படுத்தி மதம் மாற்றியதுடன், கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மிரட்டி பிளாக்மெயில் செய்ததாகவும் எழுந்துள்ள புகார்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

பனஸ்காந்தா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு திருமணமான பெண், காவல் நிலையத்தில் பரபரப்பான புகாரை அளித்துள்ளார். அந்தப் பெண்ணின் புகாரின்படி, அக்தர்ஷா ஃபகீர் என்ற நபர் முதலில் அவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதன் பிறகு, அந்தப் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாகவும், அவர் கர்ப்பமாக இருந்த காலகட்டத்திலும் பலமுறை பலவந்தமாகத் தனிப்பட்ட முறையில் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கொடுமைகளை எதிர்த்தால், அடித்துத் துன்புறுத்துவதுடன் கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்கக் காணொளிகளை  சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கப்பட்டு வந்துள்ளது.

புகாரில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அவருடைய கிராமத்தில் உள்ள ஒரு மௌல்வி முன்னிலையில், அந்தப் பெண்ணைக் கட்டாயக் கலிமா ஓதச் செய்து மதம் மாற்றியதாகவும், அவருக்கு ‘ஃபிஜா’ என்று பெயர் மாற்றப்பட்டதாகவும் பெண் குற்றம்சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, அந்தப் பெண்ணின் இரண்டு பெண் குழந்தைகளையும் மதம் மாற்ற வேண்டும் என்று கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி, அந்தப் பெண்ணைத் தாக்கி அவரது துணிகளை வீட்டின் வெளியே வீசிவிட்டு வீட்டை விட்டுத் துரத்தியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் உடனடியாக காவல் நிலையத்திற்கும், பின்னர் ஒரு  மையத்திற்கும் சென்று உதவி நாடியுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஒருமுறை புகார் அளிக்கப்பட்டு, சில குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் சில சமரசங்களின் அடிப்படையில் அவர்கள் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். வெளியில் வந்த பிறகும் மீண்டும் அதே போன்ற அச்சுறுத்தல்களும் கொடுமைகளும் தொடர்ந்ததாகப் பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை அதிகாரி (DSP) சி.எல். சோலங்கி கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புதிய புகாரின் அடிப்படையில் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். காவல்துறையினர் உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுத்து ஒருவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது மீதமுள்ள குற்றவாளிகளைத் தேடும் பணியும், விரிவான விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது.