இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் 20 முதல் 30 வயதுக்குள்ளேயே பலருக்கும் தலைமுடி நரைக்கத் தொடங்குகிறது. இதற்கு வயது மட்டுமே காரணம் அல்ல; சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் உடலில் சேரும் நச்சுகளும் மெலனின் செல்களைப் பாதித்து முடி நரைக்கக் காரணமாகின்றன. இந்நிலையில், “ஒரு நரைமுடியைப் பிடுங்கினால் அதைச் சுற்றி பத்து நரைமுடிகள் முளைக்கும்” என்ற கூற்று பலரிடையே பரவலாகக் காணப்படுகிறது.
ஆனால், ஒரு நரைமுடியைப் பிடுங்கினால் மற்ற முடிகளுக்கும் நரை பரவும் என்ற கருத்து அறிவியல் ரீதியாக முற்றிலும் தவறானதாகும். மனித தலையில் உள்ள ஒவ்வொரு முடியின் நிறமும், அந்தந்த முடியின் வேர்க்கால்களில் உள்ள மெலனின் அளவைப் பொறுத்தே அமைகிறது. ஒரு முடியை மட்டும் பிடுங்குவதால், அதன் அருகில் உள்ள முடிகளின் மெலனின் அளவில் எந்தவித மாற்றமும் ஏற்படாது.
நரைமுடியைப் பறித்தால், அந்த குறிப்பிட்ட வேரிலிருந்து மீண்டும் ஒரு நரைமுடியே வளருமே தவிர, அருகிலுள்ள முடிகளை அது ஒருபோதும் நரையாக மாற்றாது. இருப்பினும், நரைமுடியை அடிக்கடி பிடுங்குவது வேர்க்கால்களுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதைத் தவிர்ப்பது நல்லது.
முடியைப் பிடுங்கும்போது அதன் அடிப்பகுதியில் காயம் ஏற்பட்டு, அந்த இடத்தில் நிரந்தரமாகவே முடி வளராமல் போகும் அபாயம் உள்ளது. மேலும், இதனால் தலையில் சிறிய காயங்கள் உண்டாகி பாக்டீரியா தொற்று மற்றும் வீக்கம் ஏற்படலாம். அதோடு, அங்கு மீண்டும் வளரும் முடி முன்பை விடக் கடினமாகவும் ஒழுங்கற்றதாகவும் வளர வாய்ப்புள்ளது.
இயற்கை முறையில் நரைமுடி வருவதைத் தடுக்க மனஅழுத்தத்தைக் குறைப்பது மிகவும் அவசியமாகும். அதிகக் கவலை உடலில் உள்ள ஸ்டெம் செல்களைப் பாதித்து மெலனின் உற்பத்தியைக் குறைக்கிறது. எனவே, ஆழ்ந்த தூக்கம், தினசரி யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது நரைமுடி வருவதைத் தாமதப்படுத்த பெரிதும் உதவும்.
