முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-ன் 106-வது பிறந்தநாள் வருகிற 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. அ.தி.மு.க-வினர் ஒவ்வொரு வருடமும் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடம் சென்று மரியாதை செலுத்தி, சிலைகளுக்கு மாலை அணிவிப்பார்கள். தற்போது அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா போன்றோர் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவை கொண்டாட இருக்கின்றனர்.
அந்த அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் 17-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்திலுள்ள அவரது சிலைக்கு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருக்கிறார்.