சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். வெளிமாநிலத்தைச் சேர்ந்த நோயாளிகளுக்கு 50 ரூபாய் அட்மிஷன் கட்டணமும் சிகிச்சை முடிந்து செல்லும்போது அவர்கள் தங்கிய அறைக்கு குறைந்தபட்ச கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அட்மிஷன் கவுண்டரில் சுழற்சி முறையில் ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். கடந்த மே மாதம் வெளி மாநில நோயாளிகள் செலுத்திய அட்மிஷன் கட்டணம் உள்ளிட்ட இதர கட்டண வசூலில் மோசடி நடந்துள்ளது.

இந்த நிலையில் 1000 ரூபாய் வசூலித்து 50 ரூபாய் மட்டுமே கணக்கில் காட்டியுள்ளனர். இது குறித்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கிளார்காக வேலை பார்க்கும் குபேரன்(50), கலைமகள்(44) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.