ஆயிரம் ஆசைகள் இருந்தாலும், தன் சொந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டே சாக வேண்டும் என்ற ஒரு தந்தைக்கான ஆகக் கடைசி ஆசையைக் கூட இந்த உலகம் அத்தனை எளிதாக நிராகரித்துவிடுகிறது.” ஒடிசாவை அரங்கேறியுள்ள இந்த நெஞ்சை உலுக்கும் குடும்ப விபரீதம், மனித நேயத்தின் உச்சக்கட்ட கொடூரத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

ஒடிசாவை சேர்ந்த ஸ்வப்னேஷ்வர் மிஸ்ரா என்ற இளைஞருக்கும், அவரது மனைவி அனாமிகாவிற்கும் இடையே நீண்ட நாட்களாக கடுமையான குடும்பத் தகராறு இருந்து வந்தது. கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட ஒரு மோதலின் போது, அனாமிகா தன் கணவனை மிகக் கொடூரமாகத் தாக்கியதில் ஸ்வப்னேஷ்வரின் தலையில் தையல் போடும் அளவிற்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, தன் பிஞ்சு மகளையும் தூக்கிக்கொண்டு அனாமிகா பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

ஏற்கனவே நாள்பட்ட கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்த ஸ்வப்னேஷ்வர், கடந்த ஜூலை 9-ஆம்தேதி கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைப் படுக்கையில் தனது இறுதி மூச்சுக்காகப் போராடிக் கொண்டிருந்த அந்த நொடியிலும், “என் மகளைக் கடைசியாக ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும்” என்று ஸ்வப்னேஷ்வர் கதறியுள்ளார்.

ஆனால், அவரது மனைவி அனாமிகா இறுதிவரை குழந்தையைத் தன் கணவரிடம் காட்டவே இல்லை. மகளின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல், தன் நெஞ்சில் பாரத்தோடே ஸ்வப்னேஷ்வரின் உயிர் மருத்துவமனையில் பிரிந்தது.

தற்போது அவரது தந்தை பிரபுல்லா மிஸ்ரா, தனது மகனின் மரணத்திற்கு மருமகளின் கொடூரத் தாக்குதலும், மன உளைச்சலும் தான் காரணம் என்று லக்ஷ்மிஜோர் காவல் நிலையத்தில் கண்ணீரோடு புகார் அளித்துள்ளார். இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைக்குத் தயாராகி வருகின்றனர்.