தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாச்சூர் மொட்டையன் தொப்பு பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ளார். கடந்த 2000-ஆம் ஆண்டு கார்த்திகேயனின் தாய் நாகலட்சுமி இறந்துவிட்டார். கடந்த 2024-ஆம் ஆண்டு அறநிலைய துறையின் கீழ் திருவொற்றியூரில் இருக்கும் தியாகராஜ சுவாமி கோவிலில் டிரைவர் தபேதார், தூய்மை பணியாளர், காவலர் என 12 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது.

அதற்கு விண்ணப்பித்த கார்த்திகேயனுக்கு ஜனவரி 27ஆம் தேதி காலை நேர்முக தேர்விற்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி மதியம் கார்த்திகேயன் அந்த கடிதத்தை வாங்கியுள்ளார். தபால் தாமதமாக வந்ததால் அன்றைய தினம் காலை நடைபெற்ற நேர்முக தேர்விற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கார்த்திகேயன் மன உளைச்சலில் இருந்தார். இது குறித்து தபால் நிலையத்திற்கு சென்று கேட்டபோது நான்காம் தேதி காலை கடிதம் கொண்டு வந்த போது வீட்டில் யாரும் இல்லை என தபால் நிலைய ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து கார்த்திகேயன் கூறும்போது தந்தையின் மரணத்திற்கு பிறகு எனது குடும்பம் வறுமையில் வாடியது. மூன்று சகோதரிகள் உள்ளனர். நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் விண்ணப்பித்தேன். தபால் ஊழியர்களின் அலட்சியத்தால் எனது நேர்முக தேர்வும், வேலையும் பறிபோனது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனடியாக விசாரித்து எனக்கு வேலை கொடுக்க வேண்டும். எனது குடும்பத்தின் வறுமையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அலட்சியமாக இருந்த தபால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.