கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக சேவகி உமா, ஆதரவற்றோர் மற்றும் தெருவில் வசிப்பவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். உணவு இல்லாதவர்களுக்கு உணவு வழங்குவது, வயதானவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதற்காக தனது சொந்த வருமானத்திலிருந்தும் ஒரு பகுதியை செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், உதவி செய்ய விரும்புபவர்கள் தன்னை தொடர்பு கொள்வதற்காக சமூக வலைதளங்களில் தனது தொலைபேசி எண்ணையும் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அந்த தொலைபேசி எண்ணை பயன்படுத்தி சிலர் தனக்கு தொடர்ந்து ஆபாசமான தொல்லைகளை கொடுத்து வருவதாக உமா கண்ணீருடன் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார். ஆபாச அழைப்புகள் வருவதுடன், சிலர் வீடியோ அழைப்புகள் மூலம் எல்லை மீறி நடந்து கொள்வதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், இளம் வயதினர் சிலரும் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக கூறியுள்ள உமா, இதுபோன்ற செயல்கள் தனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

தன்னை தொடர்பு கொண்ட ஒருவர், வீடியோ அழைப்பில் பேச முயன்றதாகவும், அழைப்பை ஏற்காத நிலையில் பின்னர் தகாத காணொலிகளை அனுப்பியதாகவும் உமா கூறியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக ஏற்கெனவே காவல்துறையில் பல முறை புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் இதுவரை உரிய விசாரணை நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே இந்த விவகாரத்தை சமூக வலைதளத்தின் மூலம் வெளிப்படையாக தெரிவிப்பதாகவும் உமா கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் உமா பங்கேற்றிருந்தார். சமூக சேவை காரணமாக குடும்பத்தில் ஏற்படும் சிரமங்கள் குறித்த விவாதத்தில், அவரது மகன்களும் தங்களது மனக்குமுறலை பகிர்ந்திருந்தனர். இருப்பினும், தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருவதாக உமா அப்போது தெரிவித்திருந்தார். இத்தகைய சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் பெண்ணுக்கு இதுபோன்ற தொல்லைகள் கொடுக்கப்படுவது சமூக வலைதளங்களில் பலரது கண்டனத்தையும் பெற்றுள்ளது.