மத்தியப் பிரதேசம் ரத்லாம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ஒரு கொடூரச் சம்பவம், கணவன்-மனைவி இடையேயான உறவின் மீதான நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. நேற்று இக்கோரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
சம்பவத்தன்று வீட்டில் அஸ்கர் அலி, அவரது மனைவி ருகையா மற்றும் அவர்களது குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர். குழந்தைகள் வெளியே சென்றிருந்த அந்தச் சமயத்தில், திடீரென வீட்டிற்குள்ளிருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர். அங்கு படுக்கையில் ருகையா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடக்க, கொடூரமான முறையில் கணவன் அஸ்கர் அலி கத்தியைக் காட்டி மிரட்டியபடி உடலின் அருகிலேயே அமர்ந்திருந்தது அப்பகுதி மக்களைப் பெரும் பீதியில் ஆழ்த்தியது.
உடனடியாகப் பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, காவல் துறையினரும் தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து வீட்டைச் சுற்றி வளைத்தனர். ரத்தக்கறை படிந்த கத்தியுடன் அமர்ந்திருந்த அஸ்கர் அலியைப் போலீசார் கைது செய்தனர். மேலும், உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. இதுகுறித்து காவல் ஆய்வாளர் விக்ரம் சிங் சௌகான் கூறுகையில், கைது செய்யப்பட்ட கணவனிடமும், அவனது குடும்பத்தினரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
