தமிழக அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாக சமூக வலைதளங்களிலும் கடந்த சில நாட்களாக அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ், முதலமைச்சர் விஜய்யின் டிவிகே (TVK) கட்சியில் இணையப் போகிறார் என்று காட்டுத்தீயாய் வதந்திகள் பரவி வந்தன. இந்த விவகாரம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாஜி அமைச்சர் காமராஜ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை (EPS) நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
அப்போது, சோஷியல் மீடியாவில் வெளியான தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தி என்று விளக்கிய அவர், தலைமை தனக்கு அறிவித்த ‘அமைப்புச் செயலாளர்’ பொறுப்பை முழு மனதோடு ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, ‘டெல்டாவில் அதிமுகவின் கூடாரம் காலியாகப் போகிறது’ என்று சி.விஜயபாஸ்கர் பேசியிருந்த சூழலில், காமராஜின் இந்த மூவ் எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக நிம்மதியைத் தந்துள்ளது.
இருப்பினும், அதிமுகவின் உட்கட்சிப் பூசலும், அதிருப்திப் புகார்களும் இன்னும் ஓயவில்லை என்பது அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் மூலம் அம்பலமாகி வருகிறது. கட்சித் தலைமை அறிவித்த புதிய பொறுப்புகளை ஏற்கும் விஷயத்தில், அதிமுகவின் முக்கியத் தூண்களாகக் கருதப்படும் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி.வீரமணி உள்ளிட்ட சீனியர் தலைவர்கள் பலர் இப்போதைக்கு அந்தப் பதவிகளை ஏற்க முடியாது எனப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தலைமை மீதுள்ள அதிருப்தி காரணமாகவே இவர்கள் புதிய பொறுப்புகளைப் புறக்கணித்து வருவதாகக் கூறப்படுவதால், அதிமுக கூடாரத்தில் சலசலப்பு அதிகரித்துள்ளது. ஒருபுறம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், மறுபுறம் முக்கியத் தலைவர்கள் காட்டும் வேகம் காரணமாகத் தமிழக அரசியல் களம் இப்போதைக்கு பயங்கர சூடாகவே இருக்கும் எனத் தெரிகிறது.
