இந்தியாவில் சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது வருகிற 2024-ஆம் ஆண்டுக்கு முன்பாக இந்தியாவில் 26 பசுமைவழிச் சாலைகள் அமைக்கப்படும். இந்த சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு சுங்க கட்டணம் வசூலிப்பதில் புதிய விதிகள் அமல்படுத்தப்படும். பசுமை விரைவு சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு அமெரிக்காவில் உள்ள சாலைகள் தரத்துக்கு ஈடாக இந்திய சாலைகளும் இருக்கும் கூறப்படுகிறது. அதோடு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதிலும் பெரிய மாற்றம் வரும் என நிதின் கட்காரி கூறியுள்ளார்.
சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த நீண்ட நேரம் வாகனங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்த நிலையில் பாஸ்ட் டேக் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணம் கழிக்கப்பட்டதால் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் குறைந்தது. இதேபோன்று தற்போது வாகனங்களில் ஜிபிஎஸ் வசதி மூலம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் முறையும் அறிமுகப் படுத்தப்பட இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தும் பெரும் சுமை குறையும் என்று கூறப்படுகிறது. மேலும் சமீபத்திய நம்பர் பிளேட் சார்ந்த கட்டண வசூலிக்கும் முறையையும் அறிமுகப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்று கூறியுள்ளார்.