பாகிஸ்தான் நாட்டில் பிரபல உருது கவிஞரான பயஸ் அகமதுவை நினைவு கூறும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தி திரையுலகின் பாடல் ஆசிரியரான ஜாவித் அக்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அங்கு அவரிடம் வரிசையில் நின்ற ஒரு நபர் கூறியதாவது “நீங்கள் பாகிஸ்தானிற்கு பலமுறை வந்துள்ளீர்கள். மீண்டும் நீங்கள் இந்தியாவிற்கு செல்லும்போது உங்கள் மக்களிடம் பாகிஸ்தான் மக்கள் எவ்வளவு நல்லவர்கள் என்று எடுத்து சொன்னதுண்டா? என்று கேட்டுள்ளார். அதற்கு அக்தர் கூறியதாவது “நாம் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.

இதெல்லாம் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையாது. மும்பை பயங்கரவாத தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்று நம் அனைவருக்கும் தெரியும். அவர்கள் வேறு எந்த நாட்டில் இருந்தும் வரவில்லை. அவர்கள் உங்களுடைய நாட்டவர்கள்தான் இன்னமும் உங்களுடைய நாட்டில் சுதந்திரமாக உலவி கொண்டிருக்கிறார்கள். இது குறித்து இந்தியர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பாகிஸ்தானிய கலைஞர்களான மெஹதி ஹாசன் மற்றும் நஸ்ரத் பதே அலி கான் ஆகியோர்களை பாராட்டும் விதமாக இந்தியாவில் பெரிய பெரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் பிரபல பாடகியான லதா மங்கேஷ்கருக்கு ஒரு நிகழ்ச்சி கூட பாகிஸ்தான் நடத்தவில்லை” என்று கூறியுள்ளார்.