தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே மோதல் நீடித்து வருகின்ற நிலையில் சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தொடரில் தொடக்க உரையில் ஆளுநர் தமிழ்நாடு, காமராஜர், அண்ணா, பெரியார், அம்பேத்கர், கருணாநிதி போன்ற பெயர்களை உச்சரிக்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த செயலுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அன்றைய தினம் ஆளுநர் அவையில் இருக்கும் போதே முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து தீர்மானம் இயற்றினார்.
இந்நிலையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் இன்று செய்யப்பட்டுள்ளது. அப்போது ஆளுநர் உரைக்கு நன்றியுடன், வருத்தத்தையும் பதிவு செய்ய வேண்டும் என தி.மு.க எம்.எல்.ஏ கம்பம் ராமகிருஷ்ணன் சட்டப்பேரவையில் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். மேலும் தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு ஆளுநரின் ஒப்புதல் பெற்ற உரையின் சில பகுதிகளை இணைத்தும், விடுத்தும் ஆளுநர் உரையாற்றியமைக்கு பேரவை தனது வருத்தத்தை பதிவு செய்கிறது என தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார்.