கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வருடம் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த நிலையில் பள்ளி சூறையாடப்பட்டது. இதனால் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் பள்ளியின் தாளாளர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது டிசம்பர் 5-ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு 9 முதல்‌ 12-ம் வகுப்பு வரை பள்ளியைத் திறக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.

இந்த வழக்கின் ‌ விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்த போது மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2 நிரந்தர உளவியல் ஆலோசகர்கள் பள்ளியில் நியமிக்கப்பட்டுள்ளதாக பள்ளி தரப்பிலிருந்து அறிக்கை செய்யப்பட்டது. அதன் பிறகு பள்ளியின் நிலைமை சீராக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை சமர்ப்பித்தார். இதனால் நீதிபதி 5 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளியை திறக்க அனுமதி கொடுத்து உத்தரவு பிறப்பித்தார். அதன் பிறகு வழக்கின் விசாரணையை 6 வார காலத்திற்கு தள்ளி வைத்து ‌ நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பள்ளி வளாகத்திற்குள் பாதுகாப்பிற்குள் இருக்கும் காவல்துறையினர் சீருடை இல்லாமல் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.