சேலத்தில் காளான் பிரியாணியில் புழு இருந்தது குறித்து கேள்வி எழுப்பிய வாடிக்கையாளரை உணவக ஊழியர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் மணி என்பவர் காளான் பிரியாணி பார்சல் வாங்கி வீட்டுக்கு சென்று பார்த்ததும் அதில் புழு இருந்தது தெரிய வந்தது. பின் உணவுடன் உணவகத்திற்கு சென்ற அவர் இது குறித்து கேள்வி எழுப்பிய போது அவரை உணவக ஊழியர்கள் மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த மணி உணவை தூக்கி எறிந்து விட்டு வீட்டை நோக்கி புறப்பட்டு விட்டார். தரமற்ற உணவுகளை வழங்கி வரும் உணவகம் மீது அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பது பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருப்பதாக அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து வேதனை தெரிவிக்கின்றனர்.