நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய 58வது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். விஜய் வெளியிட்ட பதிவில் சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக சீமான் விஜயை மிகவும் விமர்சித்தார். குறிப்பாக அவரின் கட்சி கொள்கைகள் அழுகிய கூமுட்டை என்றும் லாரி லாரிப்பட்டு செத்து விடுவார் என்றும் கடுமையான சொற்களால் விஜயை சீமான் விமர்சித்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தினரிடம் சீமானை மீண்டும் விமர்சிக்க வேண்டாம் என்று விஜய் கூறியிருந்தார். சீமான் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் விஜய் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியது.
இந்நிலையில் தற்போது சீமான் பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஜய்க்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் என்னுடைய பிறந்தநாளில் வாழ்த்துக்களை தெரிவித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஐயா அவர்களுக்கும், முன்னாள் ஆளுநர் மற்றும் பாஜக மூத்த தலைவர் அம்மையார் தமிழிசை சௌந்தரராஜனுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் அன்பு அண்ணனுமான தொல். திருமாவளவனுக்கும், பாமக கட்சியின் நிறுவனர் ஐயா ராமதாஸ் அவர்களுக்கும், மக்கள் நீதி மையத்தின் தலைவர் அண்ணன் கமல்ஹாசனுக்கும் நன்றி தெரிவித்தார்.
இதே போன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவரின் பெயர்களையும் குறிப்பிட்ட சீமான் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு தம்பி விஜய் என்று குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருந்தார். மேலும் முன்னதாக கொள்கைக்கு எதிராக பெற்றோரே வந்தாலும் அவர்கள் எதிரி தான் இதில் அண்ணன் தம்பி உறவு எல்லாம் என்ன இருக்கிறது என்று சீமான் குறிப்பிட்ட நிலையில் தற்போது விஜயை தம்பி என்று குறிப்பிட்டு அவர் நன்றி தெரிவித்தது பேசும் பொருளாக மாறியுள்ளது.