மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வாகி, ஐதராபாத்தில் உள்ள தேசிய காவல் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் அதிகாரி ஒருவர், சக பெண் அதிகாரியின் பாலியல் தொல்லை காரணமாகத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 28 வயதான உதய் கிருஷ்ணா ரெட்டி என்பவர், ஐதராபாத்தில் உள்ள தேசிய காவல் அகாடமியில் ஐ.பி.எஸ். பயிற்சிக் காலத்தில் உள்ளார். இதே அகாடமியில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரும் பயிற்சி பெற்று வருகிறார். இந்தச் சூழலில், உதய் கிருஷ்ணா ரெட்டி திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் எழுதியுள்ள பரபரப்பான கடிதம் ஒன்றைக் கைப்பற்றிய போலீசார், அதனை அடிப்படையாகக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உதய் கிருஷ்ணா ரெட்டி எழுதியுள்ள கடிதத்தில், தற்கொலை முயற்சிக்குக் காரணமான திடுக்கிடும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். “பயிற்சி நேரத்தில், அந்தப் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி என்னை உல்லாசமாக இருக்க வா என்று அழைத்து வற்புறுத்தினார். அதற்கு நான் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தேன். இதனால் அவர் என்னுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்தார். மேலும், அவர் அடிக்கடி எனது அறைக்கே வந்து எனக்குத் தீவிரமான பாலியல்  தொந்தரவுகளைக் கொடுத்து வந்தார். இந்தத் தொல்லையில் இருந்து தப்பிக்கவும், எனது பாதுகாப்புக்காகவும் இந்தச் சம்பவங்கள் குறித்த வீடியோவை எனது செல்போனில் பதிவு செய்து வைத்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தொடர் பாலியல் அத்துமீறல்களுக்கு முற்றிலும் முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கில், அந்தப் பெண் அதிகாரியின் கணவருக்கு அந்த வீடியோ ஆதாரத்தை உதய் கிருஷ்ணா ரெட்டி அனுப்பி வைத்துள்ளார். இதனால் ஏற்பட்ட மோதலின் உச்சக்கட்டமாகவே அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்பது கடிதத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

தற்கொலைக்கு முயன்ற உதய் கிருஷ்ணா ரெட்டி, ஒரு சாதாரண போலீஸ்காரராக இருந்து ஐ.பி.எஸ். அதிகாரியாக உயர்ந்த ஒரு சாதனையாளர் ஆவார். ஆந்திரக் காவல் துறையில் போலீஸ்காரராகப் பணியாற்றிய அவர், கடந்த 2019-ஆம் ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, கடினமாக உழைத்து யு.பி.எஸ்.சி. தேர்வுக்குப் படித்தார். அதன் பயனாக, கடந்த 2024-ஆம் ஆண்டு தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ். அதிகாரியாக உயர்ந்தார். இவரது இந்த அசாத்திய சாதனை ஊடகங்களில் வெளியாகிப் பாராட்டப்பட்ட நிலையில், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இவரை நேரடியாகத் தனது இல்லத்திற்கு அழைத்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.