இந்தியாவில் 2020 ஆம் வருடம் புது கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதன்படி தற்போது எம்பில் படிப்புகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் முதுகலை பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் நேரடியாக ஆராய்ச்சி படிப்பை தொடருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது கல்லூரிகளில் 3 வருட பட்டபடிப்பை 4 வருடங்களாக உயர்த்த பல்கலைக்கழக மானியக் குழு திட்டமிட்டு உள்ளது.
இந்த 4 வருட இளங்கலை பட்டம் பெற்றவர்கள் நேரடியாக முனைவர் படிப்பை தொடரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாற்றங்களை அடுத்து தற்போது முக்கியமான அறிவிப்பை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் மாணவர்கள் ஒரே சமயத்தில் 2 படிப்புகளை படிக்க கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக யுஜிசி செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில் “மாணவர்கள் ஒரே சமயத்தில் 2 படிப்புகளை படித்து கொள்ளலாம். அதற்கு உதவும் அடிப்படையில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள் நிர்வாக வழிகாட்டுதல்களை மாற்றியமைக்க வேண்டும். அத்துடன் மாணவர்கள் படிப்பை தொடர தேவையான வசதிகளை வழங்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.