‘ரிஸ்பாட்’ (Rizzbot) என்ற வைரலான மனித உருவ ரோபோவை உருவாக்கிய ‘சோஷியல் ரோபோடிக்ஸ்’ (Social Robotics) என்ற நிறுவனம், பிரபல யூடியூபர் மற்றும் ஸ்ட்ரீமரான ஐஷோஸ்பீட் (IShowSpeed) மீது $1 மில்லியன் (சுமார் ₹8.3 கோடி) இழப்பீடு கோரி டெக்சாஸில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நேரலை ஒன்றில், ஆத்திரமடைந்த ஐஷோஸ்பீட் இந்த ரோபோவை தாக்கி, கழுத்தை நெரித்ததால், ரோபோவுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டதாக நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

யூடியூபரின் இந்தச் செயலால், ரிஸ்பாட் ரோபோவின் வாய், கழுத்து மற்றும் உணர் கருவிகள் உட்படப் பல இயந்திர பாகங்களில் நிரந்தரச் சேதம் ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்த ரோபோவால் சரியாக நடக்க முடியவில்லை என்றும், அதன் வீடியோக்களுக்கான பார்வைகளும் 70% வரை குறைந்துவிட்டதாகவும் சோஷியல் ரோபோடிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“ஒரு அதிநவீன ரோபோவுடன் இப்படி நடந்துகொள்வது முறையல்ல என்று ஸ்பீட்டிற்குத் தெரியும்” என்றும், இதனால் ஏற்பட்டச் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நிறுவனம் தனது மனுவில் கூறியுள்ளது.