புனித நகரமான வாரணாசியில் மனிதநேயத்தை உலுக்கும் ஒரு கோரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 15 நாட்களாக மாயமாகியிருந்த 19 வயது இளைஞர், அவருடன் மது அருந்திய மூன்று நெருங்கிய நண்பர்களாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதுவும் கொலையை எப்படி மறைப்பது என்று யூடியூப்பில் தேடி, உடலைத் துண்டு துண்டாக வெட்டி மாட்டு சாணத்தில் புதைத்த விவகாரம் ஒட்டுமொத்த காசியையும் அதிரவைத்துள்ளது.

வாரணாசியின் சிக்ரா பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞரான இஷு கன்னோஜியா  கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதியிலிருந்து திடீரெனக் காணாமல் போனார். மகனைக் காணவில்லை என்று குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், இஷு கடைசியாக தனது நண்பர்களான பிரதீப், ரோஹித் மற்றும் ராம்கிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தச் சென்றது தெரியவந்தது. தொழில்நுட்பக் கண்காணிப்பு உதவியுடன் அந்த மூன்று பேரையும் காவல்துறையினர் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போதுதான் அந்தப் பயங்கர உண்மைகள் வெளியில் வந்தன.

ஆகஸ்ட் 6 அன்று நண்பர்கள் நால்வரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. ஆத்திரமடைந்த மூன்று நண்பர்களும் சேர்ந்து இஷுவைக் கழுத்தறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். கொலையைச் செய்ததோடு நிற்காமல், சாட்சியங்களை அழிக்க அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று யூடியூப்பில் தேடித் திட்டம் தீட்டியுள்ளனர். திட்டத்தின்படி, சடலத்தை 5 துண்டுகளாக வெட்டி, பிளாஸ்டிக் சாக்குமூட்டையில் அடைத்து பெரிய சாண குவியலில்  ஆழமாகப் புதைத்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளனர்.

சம்பவத்தன்று அவ்வழியாகச் சென்ற ஒருவரின் நாக்கில் சாணக் குப்பையில் இருந்து வீசிய தாங்க முடியாத துர்நாற்றம் பட்டுள்ளது. உடனடியாக அவர் 112 அவசர உதவி எண்ணுக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சாணக் குப்பையைத் தோண்டி பார்த்தபோது, அழுகிய நிலையில் இருந்த இஷுவின் உடலைக் கண்டு அதிர்ந்து போயினர்.

கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதோடு, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.