திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் டால்பின் நோஸ் பகுதியை பார்த்துவிட்டு தான் செல்கின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த 20 தனியார் கல்லூரி மாணவர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.

அவர்கள் டால்பின் நோஸ் பகுதிக்கு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக பிரதாப் என்பவர் பாறையில் இருந்து தவறி கீழே விழுந்து ஒரு மரக்கிளையில் மாட்டிக் கொண்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பள்ளத்தாக்கில் இறங்கி தேடி பார்த்தனர்.

அப்போது 100 அடி பள்ளத்தில் ஒரு மரக்கிளையை பிடித்துக் கொண்டிருந்த பிரதாப்பை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் தயாராக நின்று ஆம்புலன்ஸ் மூலம் பிரதாப் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.