புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நைனான்கொல்லை கிராமத்தில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கேசவன் விவசாயம் பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கேசவன் சுரேஷ் என்பவர் வீட்டிற்கு முன்பு இருக்கும் மரத்தில் ஏறி மரக்கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் உரசியது.

இதனால் மின்சாரம் பாய்ந்து கேசவன் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே கேசவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சமூக ஆர்வலராக இருந்த கேசவன் தனது கண்களை தானம் செய்யப் போவதாக ஏற்கனவே குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

அவரது ஆசைப்படி கேசவனின் மனைவி தனது கணவரின் கண்களை தானமாக வழங்குவதற்கு ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கேசவனின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது. அந்த கண்கள் பார்வை திறன் பறிபோனவர்களுக்கு பொருத்தப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர். தனது கணவரின் கண்களை தானமாக வழங்கிய கேசவனின் மனைவி பழனியம்மாளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.