கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்குத்து பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஸ்வநாதனுக்கு சொந்தமான இடத்தில் அவரது தம்பி சாரங்கபாணியின் மனைவி ராஜாமணி பசுமாட்டை கட்டியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த விஸ்வநாதனின் மனைவி கஸ்தூரி ஏன் எங்களது இடத்தில் பசுமாட்டை கட்டுகிறாய் என தட்டி கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த ராஜாமணி, சாரங்கபாணி, அவர்களது மகன்கள் உதயசூரியன், ரஞ்சனி குமார், மருமகள்கள் அனிதா, பரிமளா ஆகியோர் இரும்பு குழாய் மற்றும் கட்டையால் விஸ்வநாதன், கஸ்தூரி, அவரது மகன் ரகுபதி, மருமகள் வைதேகி ஆகியோரை தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த ரகுபதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரகுபதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு \பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ரகுபதியின் உறவினர்கள் உதயசூரியன், ரஞ்சனி குமார், பரிமளா ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.