கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் ராஜஸ்தானை சேர்ந்த விகேஷ் ஜெயின்(41) என்ற தங்க நகை வியாபாரி புகார் அளித்துள்ளார். அவர் புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 12 வருடங்களாக நான் சொக்கம்புதூரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.

இந்நிலையில் கோவை இடையர் வீதியில் நகை பட்டறை நடத்தி வரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சேக் சலாம் அலி ஜமேதாரிடம் (39) கடந்த 3 ஆண்டுகளாக நகை செய்வதற்கு தங்க கட்டிகள் கொடுத்து வந்தேன். அவர் செய்து கொடுக்கும் நகைகளை மும்பையில் விற்பனை செய்வேன். அவரது பட்டறையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அஜய்துலா என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் நான் மும்பையில் இருக்கும் நகை கடையிலிருந்து 11 கிலோ 473 கிராம் தங்க கட்டிகளை வாங்கி வந்து சேக் சலாம் அலி மற்றும் அஜய்துலா அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் 541 கிராம் தங்கத்திற்கு ஆபரணங்களை செய்து தந்தனர். அதன் பிறகு 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ 140 கிராம் தங்கத்தை ஆபரணங்களாக செய்து தரவில்லை.

அதன் பிறகு இருவரும் தலைமறைவாகி விட்டனர். எனவே தங்கத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அஜய்துல்லாவை கைது செய்து, அவரிடம் இருந்த 260 கிராம் நகைகளை பறிமுதல் செய்தனர். சேக் சலாம் அலியை தீவிரமாக தேடி வருகின்றனர்.