புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் புகழ்பெற்ற விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 6-ஆம் தேதி காலை 8 மணிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்பா ஆகியோர் கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்துச் வரப்பட்ட 571 காளைகள் கலந்து கொண்டது. மேலும் 250 மாடு பிடி வீரர்கள் சுழற்சி முறையில் களம் கண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதற்கிடையே மாடுகள் முட்டியதால் காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மருதா(19) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.