கேரளாவில் பிரிட்டிஷ் சுற்றுலாப்பயணிகளுடன் உரையாடிய உள்ளூர் பெண், “ஆங்கிலேயர்கள் இந்தியாவைச் சூறையாடினீர்கள்… பொக்கிஷங்கள், கருப்பு மிளகு, எல்லாம்! கோஹினூர் வைரம் இங்கிருந்து கொள்ளையடித்தது, இந்தியாவுக்குத் திருப்பிக் கொடுங்கள்” என்று நகைச்சுவையுடன் கூடிய கோபத்துடன் கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் “எம்மா” என்ற பிரிட்டிஷ் சுற்றுலாப்பயணி பகிர்ந்த இந்தக் காட்சியில், பெண்ணின் கேள்விகளுக்கு அவர்கள் சிரித்துக்கொண்டே, “ராஜா சார்லஸிடம் பேசி சொல்கிறோம்” என்றும், “எங்கள் மூதாதையரிடம் பேச வேண்டும்” என்றும் பதிலளித்தனர். ஆனால் அவர்களின் முகத்தில் தர்மசங்கடம் தெரிந்தது. இந்தச் சம்பவத்தை “எங்கள் பயணத்தில் மிகவும் அசௌகரியமான தருணம்” என்று எம்மா தனது பதிவில் குறிப்பிட்டார்.
View this post on Instagram
பிரிட்டிஷ் சுற்றுலாப்பயணிகள் தாங்களாகவே, “இந்தக் கோபத்தின் பின்னணி எங்களுக்குத் தெரியும், காலனித்துவ காலத்தில் நடந்தது கொடூரம். உலகம் முழுவதும் பயணிக்கும்போது காலனித்துவத்தின் நிழல் இன்னும் நீள்கிறது என்பதை உணர்கிறோம்” என்று ஒப்புக்கொண்டனர்.
வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பெரும்பாலோர் பெண்ணின் நிலைப்பாட்டை ஆதரித்து, “சரியான கேள்வி”, “வரலாற்றை மறக்க முடியாது” என்று கருத்து தெரிவித்தனர். இந்த வைரல் வீடியோ, காலனித்துவக் கொள்ளை மற்றும் இந்தியப் பொக்கிஷங்களைத் திரும்பக் கோரும் விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.
