மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள பாக் மற்றும் குஷி பள்ளத்தாக்கில் டைனோசர்களின் 256 புதை வடிவ முட்டைகள் மற்றும் கூடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரம்மாண்டமான டைனோசர்கள் பற்றி நாம் பல கதைகளையும் திரைப்படங்களையும் பார்த்திருக்கிறோம். டைனோசர்கள் என்றாலே அளவில் பெரியவை. இந்த டைனோசர்கள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பல வருடங்களாக ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் நிலையில் அதைப்பற்றிய பல சுவாரசியமான தகவல்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் டெல்லி பல்கலைக்கழகம், மோகன்பூர்- கொல்கத்தா மற்றும் கோபால் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் நர்மதை பள்ளத்தாக்கில் மேற்கொண்ட ஆய்வில் டைனோசர்களின் முட்டைகள் மற்றும் கூடுகள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் டைனோசர்கள் வாழ்ந்தது உறுதியாகியுள்ளது. அதன்படி 6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப் பகுதியில் நீண்ட கழுத்து கொண்ட டைனோசர்கள் வாழ்ந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான ஆச்சரியமூட்டும் செய்திகள் இன்னும் வெளிவரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள்.