உலக வறுமை ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1987-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருக்கும் மனித உரிமைகள் விடுதலைக்கான சதுக்கத்தில் ஒரு லட்சம் மக்கள் திரண்டனர். அவர்கள் பசி, வறுமை, வன்முறை, அச்சம் ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தனர்.

பொதுவாக ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. வறுமை நிலை காரணமாக உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து வறுமை ஒழிப்பு தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்து வறுமை நிலை அளவு மதிப்பிடப்படுகிறது.

தரமான உணவு, சுத்தமான நீர், உடை, கல்வி, சுகாதாரம், சமூக வாய்ப்புகள், மனித அரசியல் உரிமைகள் ஆகியவை வறுமை நிலையை நிர்ணயிக்கிறது. ஆனால் வறுமை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. அதில் முதன்மையானது வேலை வாய்ப்பு இல்லாமல் போவது. வேலைவாய்ப்பு இல்லாததால் அன்றாட வாழ்வுக்கு வேண்டிய அடிப்படை தேவைகளை செய்ய முடியாமல் போகிறது. இதனையடுத்து போர், வன்முறை, அரசியல் ஸ்திரதன்மை இல்லாதது, பயங்கரவாதம், இயற்கை பேரிடர், வறட்சி, பெரும் நோய் தொற்று ஆகியவையும் வறுமைக்கான மற்ற காரணிகளாக இருக்கிறது.

ஜோசப் ரெசின்ஸ்கி என்பவர் மனித உரிமைகள் அடிப்படையில் அணுகுமுறையின் மூலமாக வறுமை ஒழிப்பை முன்னெடுத்த தன்னார்வ தொண்டு நிறுவனமான இன்டர்நேஷனல் மூவ்மெண்ட் ஏடிடி போர்த் வேர்ல்ட் அமைப்பை நிறுவியுள்ளார். கடந்த 1992-ஆம் ஆண்டு ஐநா சார்பில் அதே நாளில் உலக வறுமை ஒழிப்பதற்காக அக்டோபர் 17-ஆம் தேதியை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாட வேண்டும் அறிவிக்கப்பட்டது. இந்த நாளில் வறுமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.