மகளிர் T20 உலக கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..

தென்னாப்பிரிக்காவில் 8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. தற்போது தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குரூப் 1ல் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவும், குரூப் 2ல் இருந்து இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி இன்று கேப்டவுனில் உள்ள நியூ லேண்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி மற்றும் பெத் மூனி இருவரும் களமிறங்கி நல்ல துவக்கம் கொடுத்தனர்.. அதன்பின் அலிசா ஹீலி 25 ரன்னில் அவுட் ஆனார்.. இருப்பினும் மற்றொரு துவக்க வீராங்கனை பெத் மூனி அதிரடியாக ஆடி அரைசதம் விளாசி அவுட் ஆனார்.. பெத் மூனி 37 பந்துகளில் (7 பவுண்டரி, 1 சிக்ஸர்) 54 ரன்கள் எடுத்தார். இதையடுத்து மெக் லானிங் மற்றும் ஆஷ்லே கார்ட்னர் இருவரும் கைகோர்த்து சிறப்பாக ஆடினர்..

அதன்பின் அதிரடியாக ஆடிய கார்ட்னர் 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.. அதனை தொடர்ந்து வந்த கிரேஸ் ஹாரிஸ் 7 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இருப்பினும் மெக் லானிங் கடைசிவரை அவுட் ஆகாமல் 34 பந்துகளில் (4 பவுண்டரி, 2 சிக்ஸர்) 49* ரன்கள் எடுத்தார். மேலும் அவருடன் எலிஸ் பெர்ரி 2 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 173 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய மகளிர் அணியின் துவக்க வீராங்கனையானகளாக ஷபாலி வர்மாவும், ஸ்மிருதி மந்தனாவும் களமிறங்கினர்.. ஆனால் இவர்கள் இருவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர்.. ஸ்மிருதி மந்தனா(2) மற்றும் ஷபாலி வர்மா(9)  அவுட் ஆனதைத்தொடர்ந்து வந்த யாஸ்திகா பாட்டியா 4 ரன்னில் அவுட் ஆக இந்திய அணி 3.4 ஓவரில்  28 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அதன் பின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இருவரும் ஜோடி சேர்ந்து அணியை  சரிவிலிருந்து மீட்டு சிறப்பாக ஆடினர்.. அதிரடியாக ஆடிய ஜெமிமா 24 பந்துகளில் (6 பவுண்டரி) 43 ரன்கள் சேர்த்த நிலையில் 11வது ஓவரில் அவுட் ஆனார்.

இதையடுத்து ஹர்மன்பிரீத் கவுர் – ரிச்சா கோஷ் இருவரும் சேர்ந்து சிறப்பாக இலக்கைத் துரத்திய நிலையில், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக அரை சதம் விளாசினார்.. அதன்பின் ஆட்டத்தின் 15 வது ஓவரில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ரன் அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஹர்மன் பிரீத்  34 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்ஸ் உட்பட 52 ரன்கள் எடுத்தார். அதனைத் தொடர்ந்து ரிச்சா கோஷ் 14 ரன்களில் அவுட்டானார். பின் தீப்தி ஷர்மா – சினே ராணா இருவரும் ஜோடி சேர்ந்தனர்.

இறுதியில் 18 பந்துகளில் இந்திய அணி வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. மேகன் ஷட் வீசிய 18வது ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட 11 ரன்கள் கிடைத்தது.  பின் கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. ஜெஸ் ஜோனாசென் வீசிய 19வது ஓவரில் இந்திய அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேலும் அந்த ஓவரின் கடைசி பந்தில் ராணா (11)  அவுட் ஆனார்..  கடைசி ஒரு ஓவரில் இந்திய அணி  வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின் ராதா யாதவ் உள்ளே வந்தார். ஆஷ்லே கார்ட்னர் வீசிய கடைசி ஓவரில் ராதா யாதவ் அவுட் ஆனார். இந்திய அணியால் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இறுதியில் இந்திய மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. தீப்தி சர்மா 20 ரன்களுடனும், ஷிகா பாண்டே 1 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.