
தஞ்சை மாவட்டத்தில் தமிழகத்தின் சிற்பக் கலைக்கும், கட்டிடக்கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சை பெரிய கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள், உள்ளூர் பக்தர்கள் தினசரி வருகை புரிவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் இளம் பெண்கள் சிலர் தமிழ் புத்தாண்டு தினத்தில் தஞ்சை கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் கோவிலின் நுழைவு வாயிலில் நின்று கொண்டு சினிமா பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் மத்தியில் பல விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கோவிலின் உள்ளே செல்போன் மற்றும் கேமரா பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாட்டு விதிமுறை உள்ள நிலையில் இளம் பெண்கள் நடனமாடியது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே நடனமாடிய 2 பெண்கள் மீதும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதேபோன்று நெல்லையப்பர் கோவிலில் ஒரு சிறுவனும், சிறுமியரும் நடனமாடி ரீல்ஸ் எடுத்து இணையத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.