கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக ரோகினி சிந்தூரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது கர்நாடக கைவினை பொருட்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த ரூபா என்பவர் பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார். மேலும் ரோகிணி சித்தூரியின்  தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அவர் தொடர்பான சில ஆபாச படங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதை தற்போதைக்கு வெளியிடவில்லை எனக் கூறியும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்த ரோகினி சிந்தூரி ரூபா ஒரு மனநலம் பாதித்தவர். அவர் மீது சட்டபடியாக நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என அறிவித்தார்.

இதன் மூலமாக உயர் பதவியில் பணியாற்றும் இந்த பெண்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. பெண் அதிகாரிகளின் இந்த மோதல் விவகாரம் கர்நாடக அரசிற்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, பெண் அதிகாரிகள் இரண்டு பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கும் படி தலைமை செயலாளர் வந்திதா சர்மாவிற்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதற்கு முன்பாகவே ரோகினி சிந்தூரி மற்றும் ரூபா ஆகிய இரண்டு பேரும் நேற்று முன்தினம் விதான சவுதாவில் தலைமை செயலாளர் வந்திதா சர்மாவை தனித்தனியாக சந்தித்து மாறி மாறி புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் ரோகினி சிந்தூரி மற்றும் ரூபா ஆகிய இரண்டு பேரையும் கர்நாடக அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அவர்கள் இரண்டு பேரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் அவர்கள் இரண்டு பேரும் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கவும் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.