கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கரடிஅள்ளி ஊராட்சி கூட காரசி கொட்டாய் கிராமத்தில் ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சந்தோஷ்(18) என்ற மகனும், துர்கா(14) என்ற மகளும் இருக்கின்றனர். இதில் துர்கா தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அவ்வபோது மனநிலை பாதிக்கப்பட்ட ஜெயந்தி தனது கணவருடன் தகராறு செய்துள்ளார். அவர் இயல்பாக இருக்கும் போது கணவரிடம் அன்பாக இருப்பார். மனநிலை பாதிக்கப்படும்போது தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் அப்பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தனர். இதனையடுத்து மனநிலை பாதிக்கப்பட்டதால் கணவருடன் தகராறு செய்த ஜெயந்தி கோபத்தில் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் கணவரின் உடலுக்கு அருகே ஜெயந்தி தூங்கிவிட்டார். நேற்று காலை வீட்டுக்கு வந்த துர்கா ஜெயந்தியிடம் தந்தை எங்கே என கேட்டுள்ளார்.

அதற்கு ஜெயந்தி இனிமேல் உன் தந்தை வரமாட்டார் என கூறினார். இதனால் சந்தேகமடைந்த துர்கா அக்கம் பக்கத்தில் இருக்கும் உறவினர்களை அழைத்து வர சென்றார். அதற்குள் ஜெயந்தி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணவன் மனைவி இருவரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.