திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொற்கை மாரியம்மன் கோவில் தெருவில் விவசாயியான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாவித்திரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்த கிராமத்திற்கு அருகே இருக்கும் ஊராட்சிக்கு சொந்தமான அங்கன்வாடி மைய கட்டிடம் கஜா புயலின் போது சேதமானது.

அந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்து வருகின்றனர். அங்குள்ள ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக திருத்துறைப்பூண்டி தாசில்தார் கார்ல் மார்க்ஸ், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் வாசுதேவன், அன்பழகன் உள்ளிட்டோர் அங்கு சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாவித்திரி உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதனால் படுகாயமடைந்த சாவித்திரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.