திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை வள்ளியம்மன் கோவில் தெருவில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடுமலை நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய தர்ஷன் என்ற மகன் இருக்கிறார். இதனையடுத்து நிறைமாத கர்ப்பிணியான இந்திரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக தூத்துக்குடியில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு இந்திராவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து மோகன்ராஜ் தனது மனைவியை அழைத்து வருவதற்காக மாமியார் வீட்டிற்கு சென்றார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரம் இந்திரா, அவரது தாய் பேச்சியம்மாள், உறவினர் வன்னியராஜ் மற்றும் குழந்தைகளுடன் மோகன்ராஜ் வாடகை காரில் உடுமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த காரை சூர்யா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பழனி- பொள்ளாச்சி பைபாஸ் சாலையில் தாளையம் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி இரும்பு தடுப்பில் மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மோகன் ராஜ், இந்திரா, வன்னியராஜ், சூர்யா ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் குழந்தைகள் உயிர் தப்பினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.