கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் மதுரை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் ஒற்றை யானை கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வால்பாறை பகுதியில் சுற்றி திரிந்து தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளை சேதப்படுத்துகிறது. நேற்று காலை புது தோட்டம் எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்த காட்டு யானை மரங்களை உடைத்து கொய்யாப்பழங்களை சாப்பிட்டது.

இதனையடுத்து ஜோதிராமன் என்பவரது வீட்டு சுவரை உடைத்து பாத்திரத்தில் வைத்திருந்த தண்ணீர் முழுவதையும் குடித்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். தொடர்ந்து யானை அந்த பகுதியில் நடமாடுவதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.