
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி எல்லிஸ் சாலையில் வசித்து வருபவர் மணிகண்டன் (42). இவருக்கு ஜோதி(30) என்ற மனைவி உள்ளார். மணிகண்டன் – ஜோதி தம்பதியினருக்கு மூன்று மகன்கள் உள்ளார்கள். இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக மணிகண்டன், ஜோதியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஜோதி தன்னுடைய மகன்களுடன் மேடவாக்கம் புது நகர் 4ஆவது குறுக்குத் தெருவில் வசித்து வந்துள்ளார். அங்கு அழகு நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜோதிக்கு, மணிகண்டனின் உறவினரான கிருஷ்ணமூர்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
இதுகுறித்து அறிந்த மணிகண்டன் அடிக்கடி ஜோதியை தன்னுடன் வந்து வாழ வேண்டும் என கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இதனிடையே கடந்த 11ஆம் தேதி இரவு மணிகண்டன் மேடவாக்கம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அங்க தனது இரண்டாவது கணவருடன் வந்த ஜோதி, மணிகண்டன் உடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் போதையில் கையில் இருந்த கத்தியால் ஜோதியை சராமாரியாக குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த அவரது இரண்டாவது கணவன் கிருஷ்ணமூர்த்திக்கும் கத்தி குத்து விழுந்தது.
உயிருக்கு போராடிய ஜோதி மற்றும் கிருஷ்ணமூர்த்தியை அருகில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணமூர்த்தி மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அறிந்த மேடவாக்கம் காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் மணிகண்டன், ஜோதி தன்னை செருப்பால் அடித்து விட்டதால் ஆத்திரத்தில் ஜோதியை கொன்றதாக கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.