முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்.

முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஷாய் ஹோப்பின் சதத்தால் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ். ஆன்டிகுவாவில் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 7 பந்துகள் மீதம் வைத்து மற்றும் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

இந்த போட்டியில் ஷாய் ஹோப் சிறப்பான சதம் அடித்து தனது அணியை மறக்க முடியாத வெற்றிக்கு அழைத்துச் சென்றார். டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தனர். பேட்டிங்கில் பெரிய ஸ்கோர் போட்டாலும் அவரது பந்துவீச்சாளர்களால் அதை காக்க முடியவில்லை.

ஹாரி புரூக் 77 ரன்களும், ஜாக் க்ராலி 48 ரன்களும், தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 45 ரன்களும் விளாச இங்கிலாந்து 325 ரன்களை எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட், மோதி, ஓஷேன் தாமஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான அலிக் அத்தானாஸ் மற்றும் பிரெண்டன் கிங் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தனர். அலிக் அத்தானாஸ் 65 பந்துகளில் 66 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். பிரண்டன் கிங் 44 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு, கேசி கார்டி 16 ரன்கள் எடுத்தார்.

கேப்டனும் விக்கெட் கீப்பருமான ஷாய் ஹோப் 83 பந்துகளில் 4 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 109 ரன்கள் எடுத்து அணியை திரில் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஷிம்ரோன் ஹெட்மயர் 32 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார், ரோமாரியோ ஷெப்பர்ட் 28 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். ஷாய் ஹோப் தனது அரை சதத்தை 51 பந்துகளில் பூர்த்தி செய்தார், அதே நேரத்தில் அவர் தனது சதத்தை பூர்த்தி செய்ய மொத்தம் 82 பந்துகள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன், ரெஹான் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வேகப்பந்து வீச்சாளர் சாம் கரன் 9.5 ஓவர்களில் 98 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் எடுக்கவில்லை..

தனது சிறப்பான சதத்திற்காக ஷாய் ஹோப் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 6 ஆம் தேதி பார்படாஸ் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.