செங்கல்பட்டு மாவட்டத்தில் மண்ணிவாக்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூர் கிராமத்தில் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கலந்தாய்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

அப்போது கூட்டத்தில் பேசிய அவர், மாணவர்களின் கேள்வி திறன், புரிதல் திறனை அறிவதற்கே தேர்வுகள் நடத்தப்படுகிறது. மாணவர்கள் ஒவ்வொருவரும் கேள்வி கேட்கும் அளவிற்கு உருவாக வேண்டும்.

அதேபோல் தான் கற்றதை பிற மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களாகவும் மாற வேண்டும். சில மாவட்டங்களில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் அடைவு திறன் தேர்வுகளில் பின் தங்குவதற்கான காரணங்களை ஆசிரியர்கள் அறிய வேண்டும்.

அதற்காக மாணவர்களுடன், ஆசிரியர்கள் தொடர்ந்து கலந்துரையாடல் நடத்த வேண்டும் எனக் கூறினார். மேலும் பேசிய அவர், பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறித்து முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார்.

அதற்கான பேச்சுவார்த்தை அதிகாரிகளிடம் நடைபெற்று வருகிறது என கூறினார். பின்னர் “ப” வடிவிலான வகுப்பறை அமைப்பு குறித்து பேசி அவர், ப வடிவிலான வகுப்பறை அமைப்பு என்பது ஒரு சோதனை முயற்சி தான். பயனுள்ள இடங்களில் அதனை பயன்படுத்தி கொள்ள ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அது குறித்து எதுவும் அரசாணை பிறப்பிக்க வில்லை என தெரிவித்தார்.