சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் எம்.பி. சிவா காமராஜர் குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த கருத்துக்கு எதிராக கூட்டணி ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரே பல கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும் பலரும் தங்களது கடும் விமர்சனங்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். அதன் பின்னர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “வாழ்க்கை முழுவதும் எளிமையாக வாழ்ந்து தனக்கென சொத்து சேர்க்காமல் நாட்டிற்காக உழைத்தவர் கர்மவீரர் காமராஜர்.

அவரைப் பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு அருகதை கிடையாது. அப்போதே திமுகவும், அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என விமர்சித்தவர் காமராஜர்.

தொடர்ந்து வரலாற்றை மாற்றி திருத்தி பேசி வருவதே திமுகவினர் வேலையாக உள்ளது. கர்மவீரர் காமராஜரை கேவலப்படுத்தியுள்ளனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இதற்காக காங்கிரஸ் தலைவர்கள் வெறும் கண்டன அறிக்கை மட்டும் வெளியிட்டால் போதுமா? உண்மையாக காங்கிரஸ் காமராஜர் ஆட்சி வேண்டும் என நினைத்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளிவரத் தயாரா? குறைந்தபட்சமானத்தை காப்பாற்ற தனித்துப் போட்டியிட தயாரா? கர்மவீரர் காமராஜரையே கேவலப்படுத்திய பிறகு அந்த கூட்டணியில் இருக்க வேண்டுமா? என நான் மட்டுமல்ல நாட்டிலுள்ள சாதாரண மக்கள் கூட கேட்கிறார்கள் என கூறினார்.