தமிழக பாஜகவில் இருந்து நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறுவது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் தான் குறியாக இருக்கிறார். எப்போதும் ஊடகங்கள் தன்னை சுற்றியே இருக்க வேண்டும் என அண்ணாமலை நினைக்கிறார். ஊடகங்கள் தன்னை சுற்றி இருக்க வேண்டும் என நினைக்கும் அண்ணாமலைக்கு ஒரு வகையான மேனியா இருக்கிறது. அதற்காக பரபரப்பான கருத்துக்களை அவர் பேசி வருவதோடு அரசுக்கு எதிரான அவதூறு கருத்துகளையும் பரப்புகிறார். வட இந்திய தொழிலாளர்கள் குறித்த முக்கிய சர்ச்சைக்கு அண்ணாமலை தான் காரணம். தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் அண்ணாமலை கட்சியில் அடுத்த நிலையில் இருப்பவர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறார்.
அவர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி வைப்பதோடு தன்னிச்சையாக அவர்கள் எந்த முடிவும் எடுக்க கூடாது என நினைக்கிறார். ஏனெனில் அவர்கள் ஊடக வெளிச்சத்திற்கு வருவதை அண்ணாமலை விரும்பவில்லை. ஆகவே தான் பலர் பாஜகவை விட்டு வெளியேறுகிறார்கள். கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் கட்சியை குறை கூறாமல் அண்ணாமலையை மட்டும் தான் குறை கூறுகிறார்கள். அண்ணாமலையின் அணுகுமுறையின் காரணமாக தமிழகத்தில் சமூக பதற்றம் நிலவுகிறது. மேலும் திமுகவின் கூட்டணியை எந்த ஒரு அவதூறுகளும் வதந்திகளாலும் உடைக்க முடியாது என்று கூறினார்.