ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளியில் தம்பதியாக வாழ்ந்து வந்த திருநங்கை ஒருவரை, நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக கொலை செய்து, சடலத்தை துண்டுதுண்டாக வெட்டி, பார்சல் போல கட்டி வீசிய உணவுத் டெலிவரி பாய் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனகாப்பள்ளி மாவட்டம் காசிம்கோட்டா அருகே உள்ள போயவரம் பாலத்தின் கீழ், ரத்தக்கறையுடன் பெட்ஷீட்டில் சுற்றப்பட்ட மூட்டை ஒன்றைக் கண்ட அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வந்து பார்வையிட்ட போது, அந்த மூட்டையில் கை மற்றும் இடுப்புக்கீழ் பகுதிகள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.

மேலும் சுமார் சில கிலோமீட்டர் தொலைவில் தலை மற்றும் மற்ற உடல் உறுப்புகள் துணியில் சுற்றப்பட்டு கிடந்தன. விசாரணையில், இந்த உடல் பாகங்கள் அனைத்தும் ஒரே நபருக்குரியது என போலீசார் உறுதி செய்தனர். முதலில், கொல்லப்பட்டவர் ஆணா அல்லது பெண்ணா என்பது குறித்து உறுதி செய்ய முடியாமல் குழப்பம் ஏற்பட்டது.

பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டதில், கொல்லப்பட்டவர் அனகாப்பள்ளியை சேர்ந்த திருநங்கை தீபு என தெரியவந்தது. அவர், மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த உணவுத் டெலிவரி பன்னி(35) என்பவருடன் 5 ஆண்டுகளாக தம்பதியாக வசித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, நாகலாபள்ளியில் பதுங்கியிருந்த பன்னியை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், திருநங்கை தீபுவின் நடத்தை மீது சந்தேகத்தால் ஏற்பட்ட கோபத்தில், இருவருக்கிடையே வாக்குவாதம் தீவிரமாகி, பன்னி வீட்டில் இருந்த கத்தி மூலம் தீபுவை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

பின்னர் சடலத்தை வெட்டி, இரண்டு இடங்களில் பார்சல் போல கட்டி வீசியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது போலிஸார் பன்னியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூரக் கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.