உத்தரப் பிரதேசத்தில் பிசிஎஸ் அதிகாரியான ஸ்வாதி குப்தா, தனது பேஸ்புக் பக்கத்தில் நேரலை வீடியோ மூலம் பொதுமக்களுடன் உரையாடிய சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாயத்து ராஜ் துறையில் தன்னை சந்திக்க விரும்புவோர், 30 நாட்களுக்கு தினமும் தனது பேஸ்புக் பதிவுகளைப் பகிர வேண்டும் என்றும், தனது பேஸ்புக்கில் முதன்மை ரசிகர்கள் (Top Fans) பட்டியலில் இடம்பெற வேண்டும் என்றும் அவர் வினோதமான நிபந்தனைகளை விதித்துள்ளார். இந்தக் கோரிக்கை இணையவாசிகளிடையே அதிர்ச்சியையும் கிண்டலையும் ஏற்படுத்தியுள்ளது.

“என்னை சந்திக்க விரும்புபவர்கள், முதலில் என் பேஸ்புக்கில் டாப் ரசிகர்களாக வர வேண்டும். பின்னர், என் பதிவுகளை 30 நாட்களுக்கு தினமும் பகிர வேண்டும். இதைச் செய்தால், நானே உங்களுக்கு சந்திப்பு அழைப்பு அனுப்புவேன்,” என்று ஸ்வாதி குப்தா தனது நேரலையில் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு இணையத்தில் வைரலாக, பலர் இதை விமர்சித்து வருகின்றனர். “யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இப்போது பேஸ்புக் ரசிகர் பட்டியலை உருவாக்குகிறார்களா?” என்று ஒருவர் கிண்டலடித்தார். மற்றொருவர், “பொதுச் சேவையில் திறமைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், பேஸ்புக் லைக்குகளுக்கு அல்ல,” என்று கருத்து தெரிவித்தார்.