இன்றைய காலகட்டத்தில் ஏஐ டெக்னாலஜி தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மருத்துவம், கல்வி மென்பொருள் என அனைத்து துறைகளிலும் ஏஐ முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதனால் மக்கள் மிகுந்த பலன் அடைவதாக கூறப்பட்டாலும், மறுபுறம் பல்வேறு துறைகளில் வேலை இழப்பு அபாயமும் ஏற்பட்டு வருகிறது.

மேலும் மனிதனின் சிந்திக்கும் திறனையும் குறைப்பதாக பல அபாயகரமான ஆய்வு முடிவுகள் வெளியாகி வருகின்றன. பல மணி நேர வேலைகளை சில நொடிகளில் முடித்து விடும் இந்த ஏஐ டூல்கள் தன்னைத்தானே வருங்காலத்தில் மேம்படுத்திக் கொள்ளும் ஆற்றலை பெரும் என்பது கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  சாட்ஜிபிடியின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் சமீபத்தில் எச்சரிக்கை தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,”இன்றைய காலகட்டத்தில் ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது.

இவை தவறான நோக்கத்திற்கும் பயன்படுத்தப்படலாம். வங்கிகளின் பாதுகாப்பு அம்சங்களை கூட அவை முறியடிக்க வாய்ப்பு உள்ளது அதன் மூலம் பணத்தை திருடவும் முடியும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடையாளத் திருட்டு, இணையத்திருட்டு, போலி செய்திகள் போன்ற விஷயங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

எனவே வளர்ச்சியோடு சேர்ந்து அதனை தவறாக பயன்படுத்தும் முயற்சிகளையும் கட்டுப்படுத்த வேண்டும் அதற்கு அரசு, தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்போடு செயல்பட வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.