
புதுடெல்லி: ஏப்ரல் 2025 மாதத்தில் இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.36 லட்சம் கோடியை தொட்டுள்ளது, இது இந்திய வரலாற்றிலேயே பதிவான மிகப்பெரிய வசூல் ஆகும். கடந்த ஆண்டு ஏப்ரலில் இதே தொகை ரூ.2.10 லட்சம் கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நிகர வசூல் மட்டும் ரூ.2.09 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது. இது 9.1% வளர்ச்சியைக் காட்டுகிறது. இந்த சாதனை இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி பாதையை உறுதி செய்கிறது.
இந்த வருமானத்தை பெரிதும் பாராட்டிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “விக்ஸித் பாரதத்தின் நோக்கத்தை அடைய, ஜிஎஸ்டி கட்டமைப்பில் நம்பிக்கையுடன் பங்களித்து வரும் வரி செலுத்துவோருக்கு என் மனமார்ந்த நன்றி” என சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
மாநில நிதியமைச்சர்கள் மற்றும் மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள், CBIC அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பும் இந்த சாதனையின் பின்னணி எனவும் கூறினார்.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் ரூ.1.90 லட்சம் கோடி வருவாய் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் இறக்குமதிக் கடந்து வரும் பொருட்களிலிருந்து ரூ.46,913 கோடி வருவாய் வந்துள்ளது. வருமான வரித் திருப்பிச் செலுத்தும் தொகை ரூ.27,341 கோடியை எட்டியுள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஜிஎஸ்டி வசூலில் முன்னணி மாநிலங்களாக விளங்குகின்றன. இது இந்திய பொருளாதாரத்தின் ஊக்கத்தை வெளிப்படுத்தும் முக்கியமான அளவீடாக காணப்படுகிறது.