நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதானி விவகாரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகிறது. ஆனால் இதற்கு மத்திய பாஜக அரசு செவி சாய்க்காததால் தொடர்ந்து மூன்றாவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. இந்நிலையில் நேற்று தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் கார்கே உள்பட 18 எதிர்கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் கட்சி தலைவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டி வருவதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் இது பற்றி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறும்போது, எங்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். 200 பேர் பேரணி சென்ற நிலையில் 2000 காவலர்களை குவித்துள்ளனர். அதானிக்கு இவ்வளவு சொத்து எப்படி வந்தது?. மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு?. என்பதை விசாரிக்க வேண்டும். எங்களின் குரலை அடக்க நினைக்கிறார்கள். மேலும் நாங்கள் அமலாக்கத்துறை அதிகாரியை சந்தித்து குழுவாக விரைவில் மனு கொடுக்க இருக்கிறோம் என்று கூறினார்.