நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் அடிப்படையில் ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. பொதுவாக ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தை உயர்த்தினால் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடிய கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். அதன்படி, சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதம் 25 புள்ளிகள் உயர்த்தப்படுவதாக அறிவித்தது. இதன் காரணமாக ரெப்போ விகிதம் 6.25 சதவீதத்திலிருந்து 6.50% ஆக உயர்ந்துள்ளது. அதோடு வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் எகிறி உள்ளது.

இதனால் வீட்டுக் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் கதிகலங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே இஎம்ஐ பிரச்னையிலிருந்து மீண்டு வருவது சாத்தியமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. ரெப்போ அடிப்படையில் சென்ற வருடம் 6.5% கணக்கில் வாங்கப்பட்ட வீட்டுக் கடன், இப்போது 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் 20 வருடங்களில் முடியவேண்டிய வீட்டுக் கடன் காலம், 30 ஆண்டை தாண்டுகிறது.

அதே நேரம் மாதாந்திர வட்டியும் அதிகரித்து உள்ளது. வாங்கிய கடனுக்குரிய பணத்தை, சிறிது முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் இந்த சுமையிலிருந்து விடுபடலாம். வீட்டுக் கடனை வாங்க போகும் முன், அதனை எத்தனை வருடங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்பதை முறையாக தீர்மானிக்கவேண்டும். எடுத்துக்காட்டாக உங்களது வீட்டுக்கடனுக்கான காலம் 20 வருடங்கள் எனில், அதனை 10 ஆண்டுகளுக்குள் திருப்பிச்செலுத்த வேண்டும். ஏனெனில் வட்டி விகிதம் உயரும்போது, வீட்டுக் கடனுக்கான காலம் 25 வருடங்களாக உயர்ந்து விடும். முன்கூட்டியே கடனை செலுத்தினால் வீட்டுக்கடனுக்கான காலம் உயராமல் தடுக்க இயலும்.