சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருந்து எழும்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. ஏற்கனவே பேருந்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் வண்ணாரப்பேட்டையில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்களும் பேருந்தில் ஏறினர். இதனால் மாணவர்கள் இரண்டு பக்க படிக்கட்டுகளிலும் தொங்கியபடி பயணம் செய்தனர்.

இந்நிலையில் அரசு பள்ளி மாணவர் ஒருவர் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு கால்கள் சாலையில் உரசி படி பேருந்து ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டு பயணம் செய்தார். ஒரு கட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக கைநழுவி அந்த மாணவர் நடுரோட்டில் விழுந்து காயமடைந்தார். இதனை பார்த்ததும் டிரைவர் பேருந்தை நிறுத்தி அந்த மாணவரை மீட்டார்.

இதனையடுத்து காயமடைந்த மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக பின்னால் எந்த வாகனமும் வராததால் மாணவர் உயிர் தப்பினார். இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.