திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் இருந்து தனியார் பேருந்து நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு வேடசந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை கதிரேசன் என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக செல்வராஜ் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் வேடசந்தூர் வந்ததும் செல்வராஜ் பேருந்தை விட்டு இறங்கி ஒரு டீக்கடைக்கு நடந்து சென்றார்.

அப்போது ஆட்டோவில் வந்த 5 மர்ம நபர்கள் செல்வராஜ் மீது மோதுவது போல ஆட்டோவை ஓட்டியுள்ளனர். இதனால் சுதாரித்துக் கொண்டு செல்வராஜ் சற்று விலகினார். மேலும் கோபத்தில் செல்வராஜ் ஆட்டோவின் கண்ணாடியை உடைத்ததாக தெரிகிறது. இதனால் ஆட்டோவில் இருந்து இறங்கிய 5 பேரும் செல்வராஜை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனால் படுகாயமடைந்த செல்வராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து அதே பேருந்து மாலை ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற போது அதே கும்பல் ஆட்டோவில் வந்து பேருந்து மீது கல்வீசி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதனால் பேருந்து டிரைவர் கதிரேசன் உள்பட மூன்று பேர் காயமடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.